Suresh R, TNAU, Coimbatore

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள்

கீழ்நீரால் மீன்வழங் குந்து

மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து

கழிசுற்றிய விளை கழனி – புறநானூறு 396.

அதாவது நெல் வயலின் அடியில் மீன்கள் இருக்க, நீர்மட்டத்தில் குவளை மலர்கள் பூத்திருந்தன. அதற்கு மேலே நெல்மணிகள் விளைந்திருந்தன என்று தாவரங்களுக்கும் நீர் வளத்திற்குமான தொடர்பை அழகுற வர்ணிக்கிறது புறநானூற்றுப் பாடல்.

சங்க காலந்தொட்டே இயற்கை அமைப்பிற்கேற்ற வகையில் மலை, காடு, ஆற்றோரச் சமவெளி, கடலோர நன்னீர்ப் பகுதிகள் என நிலத்தை வகைப்படுத்தி பயிர்த்தொழில் செய்யப்பட்டது. இத்தகைய நிலங்களுக்கென தனித் தனியான தொழில்நுட்பங்கள் இருந்தன. அங்கே பயிருக்கும் இயற்கை வளங்களான சூரிய ஒளி, மண் வளம் மற்றும் நீராதாரம் ஆகியவற்றிற்குமான உறவுகள் பேணி பாதுகாக்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில் மக்கட்தொகை அதிகரிக்க, அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் விஞ்ஞான வளர்ச்சியும் அசுரவேகத்தில் வளர்ந்தது. அந்த விஞ்ஞான பாய்ச்சல் விவசாயத்திலும் அடியெடுத்து வைத்தது. அதன் விளைவாக புதுப்புது வேளாண் இயந்திரங்கள், புதிய பயிர் ரகங்கள், அபரிமிதமான விளைச்சல், அதிக லாபம் என விவசாயம் புத்துயிர் பெற்றது. இவையெல்லாம் பசுமை புரட்சியின் மாபெரும் சாதனையாகும்.

ஆனால் அதிக உற்பத்தி, அதிக லாபம் ஆகிய இலக்குகளுக்காக நாம் இழந்த மூலதனம் ஏராளம். விவசாயத்தின் ஆதாரமான மண் வளத்தை செயற்கை உரங்களிட்டு மலடாக்கிவிட்டோம். நாட்டுவிதைகளை தூக்கியெறிந்து மரபணு மாற்றப்பட்ட விதைகளால் விளைச்சலை பெருக்கினோம். இயற்கைக்கும் விவசாயத்திற்குமான தொடர்பை துண்டித்துவிட்டோம். காலங்கள் கடந்த பின்னர் தான் செயற்கை இடுபொருட்களின் விளைவுகளையும் விபரீதங்களைம் உணர்ந்து வருகிறோம். இத்தகைய நிலையில் தான் வேளாண்சூழலியல் முக்கியத்துவம் பெறுகிறது.

வேளாண்சூழலியல்:

வேளாண்சூழலியல் என்பது வேளாண் முறைகளுக்கும் அதன் சுற்றுப்புறத்திற்கும் இடையேயான தொடர்பையும் முக்கியத்துவத்தையும் பற்றிய அறிவியலாகும். இது விவசாயத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரானது அல்ல. மாறாக இயற்கை, சமூக மற்றும் மனித வளத்துடன் இணைந்து தொழில்நுட்பத்தை எவ்வாறு, எப்போது, எவ்விடத்தில் பயன்படுத்தலாம் என்பதை பற்றி விளக்குவதாகும். இத்தகைய வேளாண் சூழலியல் முறையானது மண்வகை, பயிரிடப்படும் விதைகள், காலநிலைகளை சார்ந்ததாகும். இந்த வேளாண்சூழல் அமைப்புகளில் உற்பத்தித்திறன், ஸ்திரத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய நான்கு அடிப்படைக் காரணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வேளாண் விஞ்ஞானிகள் இந்த நான்கு பண்புகளையும் ஒரு வேளாண்சூழல் அமைப்பின் வெற்றிக்கு ஒன்றோடொன்று இணைந்ததாகவும் ஒருங்கிணைந்ததாகவும் கருதுகிறார்கள். ஆனால் இத்தகைய வேளாண் சூழலியலின் மீது பல்வேறு காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

வேளாண் சூழலியலில் உள்ள சவால்கள்:

அதிகரிக்கும் மக்கட்தொகையும் அழிக்கப்படும் இயற்கை வளங்களும்:

உலகளாவிய மக்கட்தொகை தற்போதைய 7 பில்லியனிலிருந்து 2050 ஆம் ஆண்டில் 9 பில்லியனாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது (யுஎன்பிடி, 2010). அதற்கேற்ப உணவு உற்பத்தி, தீவனம் மற்றும் உயிரிசக்தி தேவைகள் அதிகரிக்கும்போது, அதை ஈடுகட்ட இடப்படும் செயற்கை இடுபொருட்கள் மண்ணின் வளத்தை குறைத்துவிடுகின்றன. மேலும் நவீன தொழில்மயமாக்கப்பட்ட வேளாண்மையில் உற்பத்தியை மட்டும் இலக்காக அளவிடும்போது கணக்கிட முடியாத பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

மண் வள பாதிப்பு:

இந்தியாவில் சுமார் 190 மில்லியன் மக்கள் நிலத்தடி நீர் மூலமாக உணவை உற்பத்தி செய்கின்றனர். சீனாவைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை 130 மில்லியனாக உள்ளது. அளவுக்கதிகமான செயற்கை இடுபொருட்களால் மண்வள சீரழிவு, நிலத்தடி தண்ணீரை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் மண்வளத்திற்கு ஒவ்வாத பொருத்தமற்ற பயிர்களை உற்பத்தி செய்தல் ஆகியவற்றால் சுமார் 2 பில்லியன் ஹெக்டேர் நிலமும், அதனை சார்ந்த 1.5 பில்லியன் மக்களும் பாதிக்கப்படுவதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தூண்டப்பட்ட காலநிலை மாற்றம்:

வேளாண்மையில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கான எரிபொருள், வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்களும் வேளாண் சூழலியலை பாதிக்கின்றன. குறிப்பாக, செப்டம்பர் 2013ன் காலநிலை மாற்றத்திற்கான இடைநிலை அரசுக்குழு (ஐபிசிசி) அறிக்கையின் முடிவின்படி, 1950 முதல் ஏற்பட்ட வெப்பமயமாதல் மனித செயல்பாடுகளின் காரணமாக நேர்ந்ததாக (95–100சதவீத நிகழ்தகவு) உறுதிப்படுத்துகிறது.

பாதிக்கப்படும் பல்லுயிர்த்துவம்:

வேளாண்சூழலை பராமரிப்பதில் பல்வேறு உயிரினங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். குறிப்பாக, ஆண்டுக்கு 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள உணவு உற்பத்தியில் தேனீக்களால் மகரந்தச்சேர்க்கை செய்யப்படுவதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) குறிப்பிட்டுள்ளது. ஆனால் அளவுக்கதிகமான ரசாயனங்களால், இயற்கையான பல்லுயிர்த்துவம் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக காலப்போக்கில் விளைச்சலும் குறைந்து போகும் அபாயம் உள்ளது.

பொருத்தமற்ற தொழில்நுட்பங்கள்:

பசுமைப் புரட்சிக்கான தொழில்நுட்பங்களானது ஆப்பிரிக்காவின் மண், மாறுபட்ட காலநிலை, பலவீனமான உள்கட்டமைப்பு மற்றும் சமூக-கலாச்சார மரபுகளுக்கு பொருந்தாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருத்தமற்ற தொழில்நுட்பங்களானது சுற்றுச்சூழல் பாதிப்பையும், உணவுப் பயிர்களின் மரபணுக்களில் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துகிறது.

எனவே விவசாய நடைமுறைகளை தீர்மானிக்கும் கலாச்சார காரணிகளைப் புரிந்துகொள்ள சமூக அறிவியலைப் பயன்படுத்துதல், கிராமப்புற சமூகங்கள் மீதான விவசாய நடைமுறைகளின் விளைவுகள், வேளாண்சூழலியலை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த நிலப்பயன்பாட்டு முறைகள் மற்றும் அவற்றின் சமூக விழுமியங்கள் ஆகியன நமது நவீன விவசாய மேம்பாட்டு முயற்சிகளில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி சூழலை பேணி பாதுகாக்க வல்லன.

24 views0 comments

Recent Posts

See All

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் சுழன்றும் ஏர்பின்னது உலகம்" -திருவள்ளுவர் வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அய்யன் வள்ளுவர் சொன்ன கூற்று, வேளாண்மையின் இன்றியமைய

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, உழவே இந்த உலகிற்கு உணவினைப் பகிர்ந்து அளிக்கிறது. வேளாண் சூழலிய

சுதந்திரத்திற்கு பிறகு வேளாண் துறையை மேம்படுத்திய ஐந்து திட்டங்கள் முன்னுரை வேளாண்மை தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 1905 ஆம் ஆண்டு புது தில்லியில் தொடங்கப்பட்ட