Muthu R, TNAU, Coimbatore

சுதந்திரத்திற்கு பிறகு வேளாண் துறையை மேம்படுத்திய ஐந்து திட்டங்கள்

முன்னுரை

வேளாண்மை தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 1905 ஆம் ஆண்டு புது தில்லியில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

"சுழன்றும்ஏர் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை."

என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி மனிதன் தன் வாழ்விற்காக பல தொழில்கள் செய்து வாழ்ந்து வந்தாலும் உண்ணும் உணவுக்காக உழவுத்தொழிலையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.மனிதனின் அத்தியாவசிய தேவையான உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் விவசாய பொருட்களையே மூலமாக கொண்டுள்ளது. அதற்காக பல்வேறு தொழில்நுட்பங்களுடன் பல்வேறு செயல்முறை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விவசாய வளர்ச்சியின் முன்னோடி - முதல் ஐந்தாண்டு திட்டம்

முதல் ஐந்தாண்டு திட்டம் விவசாய வளர்ச்சியின் ஆணி வேராக விளங்கியது. சரத்து 19 மற்றும் 31 இன் படி ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு நில உரிமை தொடர்பான பிரச்சனைகளிலிருந்து முழுமையான தீர்வு காணப்பட்டு அனைவருக்கும் நில உரிமை வழங்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த ஐந்தாண்டு திட்டம் தான் விவசாயம் மற்றும் நீர் மேலாண்மைக்கான முதல்படி, இதன்மூலம் நிறைய தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள் கட்டப்பட்டு சீரமைக்கப்பட்டன. திட்டத்தின் தொடக்கத்தில் 54 மில்லியன் டன்னாக இருந்த நாட்டின் மொத்த உற்பத்தித்திறன் திட்டத்தின் முடிவில் 65.8 மில்லியன் டன்னாக அதிகரித்தது. அதற்கு மிக முக்கியமான காரணம் காலநிலை மற்றும் சீரான மழைப்பொழிவு ஆகும்.

சொட்டு நீர் பாசனத் திட்டம்

"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வானின்றி அமையாது ஒழுக்கு."

நீர், உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவனுக்கும் இன்றியமையாதது. இக்காலகட்டத்தில் நீர் மேலாண்மை என்பது மிக முக்கியமானது. நீரை சிக்கனமாக பயன்படுத்த இஸ்ரேல் நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்திய திட்டம் தான் சொட்டுநீர் பாசனத் திட்டம். தற்போது இந்தியாவிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 40-50 சதவீதம் வரை நீரை சேமிக்கலாம். நீர் மட்டுமின்றி உரத்தையும் சொட்டுநீர் பாசனம் மூலம் அளிக்க முடியும். இத்திட்டத்தின் மூலம் பலகோடி விவசாய பெருமக்கள் பயனடைந்துள்ளனர். பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயி யோஜனா,2006 ஆம் ஆண்டு மத்திய அரசால் சொட்டு நீர் பாசனத்திற்காக தொடங்கப்பட்டு, "ஒவ்வொரு சொட்டு நீருக்கும் மேலும் அதிகமான விளைச்சல் " என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக 50,000 கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டு சிறு குறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்துடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

பசுமை புரட்சியால் வேளாண்மை துறையில் ஏற்பட்ட மாற்றங்கள்

இந்தியாவில் பசுமை புரட்சி வேளாண் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது . 1966 ஆம் ஆண்டு பசுமை புரட்சி தொடங்கபட்டு ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டது. விடுதைலைக்கு பின் இந்தியாவிலுள்ள உணவு தட்டுப்பாட்டை தடுக்க அதிக மகசூல் தரக்கூடிய வீரிய ஒட்டு விதைகள் ,மேம்பட்ட உர வகைகள் ,வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் நீர்ப்பாசன வளர்ச்சி திட்டங்கள் போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து அனைவருக்கும் உணவு என்று தன்னிறைவு பெறுவதே பசுமை புரட்சியின் மாபெரும் நோக்கம், அதை செயல்படுத்தியும் காட்டிவிட்டது. இத்திட்டம் வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களால் தொடங்கப்பட்டது, அவரின் சீரிய சிந்தனை இந்தியாவில் உணவு தட்டுப்பாட்டை குறைத்து தன்னிறைவு அடைய வழிவகை செய்தது. இதனால் அவர் “இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை” என்றழைக்கப்படுகிறார். இந்திய விவசாய பாணி மாறி புதிய தொழில்நுட்பங்களை கையாளுதல் பசுமைபுரட்சியால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மிசோரம், மணிப்பூர்,மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, அசாம் போன்றவற்றை விவசாயத்தில் முன்னேற்ற ராஷ்ட்ரிய க்ரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் 2010 ஆம் ஆண்டு முதல் மீண்டும் பசுமை புரட்சி செயல்படுத்தபட்டு வருகிறது.

தேசிய வேளாண்மை பொருட்கள் சந்தையகம்

ஒருங்கிணைந்த வேளாண் பொருட்கள் விற்பனையகங்கள் திட்டம் 2014ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் விற்பனை செய்யும் போது இடைத்தரகர்களின் பங்கை ரத்து செய்து நேரடி விற்பனையை ஊக்குவிப்பதாகும். பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் இதற்காக 4548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு செவ்வனே செயல்படுத்தபட்டு வருகிறது. இதன் மூலம் தானியம் சேமித்து வைக்கும் கிடங்குகள், மேம்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் போன்றவை கட்டுப்பட்டு செயல்படுத்தப்பட்டன. இதன்முலம் அனைத்து வகையான சமூகத்தினரும், சிறு குறு விவசாயிகளும் பயனடைய முடிகிறது. தற்போது இதே திட்டம் மேம்படுத்தப்பட்டு மின்னணு தேசிய வேளாண் பொருட்கள் சந்தையகமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போதைய திட்டங்கள்

தோட்டக்கலைத்துறையில் பல்வேறு திட்டங்கள் மானியம் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண்வள பரிசோதனை அட்டை திட்டம், மண்ணின் வளத்தை சரிபார்த்து அதற்கேற்றபடி பயிர் செய்ய உறுதுணையாக உள்ளது. .நிறைய கைப்பேசி செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு பருவநிலை மாற்றம், மழை பொழிவு, நோய் மேலாண்மை, பூச்சி மேலாண்மை, விற்பனையகங்கள், சந்தை விலை நிலவரம் போன்ற அரிய செய்திகளை வழங்கி வருகின்றன.தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் உயர்தர நடவு செடிகள் உற்பத்தி - நாற்றங்கால் அமைப்பிற்கு 40- 50 சதவிகித மானியம் ,பரப்பு விரிவாக்கத்திற்கு 40 சதவிகித மானியம், பழைய தோட்டங்களை புதுப்பிக்க 50 சதவிகித மானியம் , காளான் வளர்ப்புக்கு 40 சதவிகித மானியம்,பசுமை குடில் சாகுபடிக்கு 50 சதவிகித மானியம், ஒருங்கிணைந்த உர மேலாண்மைக்கு 30 சதவிகித மானியம் ,தேனீ வளர்ப்புக்கு 40 சதவிகித மானியம் போன்றவற்றை விவசாயிகளுக்கு தெரியப்படுத்துவற்காக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டங்கள், தேசிய ஆயுஷ் இயக்கம்- மருத்துவ பயிர்கள் சாகுபடித் திட்டம் போன்றவை நடைமுறையில் உள்ளன. ஒவ்வொரு பயிரையும் மேம்படுத்த தனித்தனி ஆராய்ச்சிகள் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களில் நடைபெற்று வருகின்றன.

முடிவுரை

சுதந்திரத்திற்கு பிறகு பல வேளாண் திட்டங்கள் செயல்படுத்தபட்டுள்ளன. அவை அனைத்தும் இந்தியாவின் கடைக்கோடி விவசாயி வரை சென்றடைந்ததா என்றால் கேள்விக்குறியே? இந்தியாவில் பல துறைகளில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விவசாயத்தில் முன்னேற்றம் என்பது சொல்லுமளவுக்கு இல்லை. இன்னும் பழைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தான் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொள்ளும் திறமையும் விவசாய அறிவும் விவசாயத்தின் மீதான நாட்டமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருந்தால், விவசாய தொழில்நுட்பங்களின் மூலம் குறுகிய இடத்தில் நிறைய மகசூல் செய்து இந்தியாவிலுள்ள வறுமையை ஒழிக்க முடியும். வகுக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்கள் வரை சென்றடைகிறதா என்பதை ஆராய்ந்து முடிவெடுத்தால் வகுக்கப்படும் திட்டங்கள் வெற்றி அடையும். வேளாண்மையில் மகசூலை அதிகரிக்க வேளாண் இடுபொருட்களான அத்தியாவசிய உரங்களுக்கு அரசு மானியம் வழங்கி விவசாய தொழில்நுட்பங்களின் மூலம் விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

22 views0 comments

Recent Posts

See All

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள் கீழ்நீரால் மீன்வழங் குந்து மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து கழிசுற்றிய விளை கழனி – புறநானூறு 396. அதாவது நெல் வயலின் அடியில் மீன்கள் இருக்க, நீர்மட்டத்தில் குவளை

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் சுழன்றும் ஏர்பின்னது உலகம்" -திருவள்ளுவர் வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அய்யன் வள்ளுவர் சொன்ன கூற்று, வேளாண்மையின் இன்றியமைய

வேளாண் சூழலியல் மற்றும் அதன் சவால்கள் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, உழவே இந்த உலகிற்கு உணவினைப் பகிர்ந்து அளிக்கிறது. வேளாண் சூழலிய