27 பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்ய வேண்டும்!வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ஆபத்தான 27 பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே முன்வைத்திருந்த பரிந்துரையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். வேதிப் பூச்சிக்கொல்லிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் காட்டிலும், நாட்டு மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பூச்சிக்கொல்லி செயல்பாட்டு அமைப்பு (Pesticide action network), PAN ஆசியா பசிபிக், PAN இந்தியா ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

மத்திய வேளாண் அமைச்சகம் 27 பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதித்து மே 18 ஆம் தேதி வரைவு உத்தரவைக் கொண்டுவந்தது. இப்படி தடை செய்யப்பட்ட 27 பூச்சிக்கொல்லிகளில் இருபது பூச்சிக்கொல்லிகள் , PAN சர்வதேச அமைப்பு வகைப்படுத்தியுள்ள மிகவும் அபாயகரமான பூச்சிக்கொல்லிகள் (Highly Hazardous Pesticides) அல்லது கடுமையான நச்சுத்தன்மை, நீண்டகால சுகாதார பாதிப்புகள், சுற்றுச்சூழல் ஆபத்துகளைக் கொண்ட பூச்சிக்கொல்லிகளாக உள்ளன. இந்தப் பூச்சிக்கொல்லிகள் புற்றுநோய், நரம்பு மண்டல நச்சு, ஹார்மோன் அமைப்புக்கு இடையூறு விளைவித்தல், இனப்பெருக்க - பிறப்புக் குறைபாடுகளுடன் தொடர்புடையவை என்று மத்திய வேளாண் அமைச்சகத்தின் தடை உத்தரவே கூறுகிறது. அத்துடன் அவை தேனீக்கள், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகளுக்கும் அதிக நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை.


மத்திய அரசு தடை விதித்து முன்மொழியப்பட்ட பல பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் தொழில் சார்ந்த பாதிப்புகளையும், பூச்சிகொல்லி குடிப்பதால் ஏற்படும் இறப்பு சார்ந்தும் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தத் தடைக்கு தொழிற்சாலைகள் தெரிவித்த ஆட்சேபத்துக்குப் பதிலளித்து, ஜூன் 10 ஆம் தேதி மற்றொரு திருத்தப்பட்ட உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது. அதில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக இந்தப் பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்க அனுமதி உண்டு என்கிறது. அது மட்டுமல்லாமல் இது சார்ந்த கருத்துக்கேட்புக்கான காலம் 45 முதல் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


"இந்த 27 பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்து மத்திய அரசு முதலில் திட்டவட்ட நடவடிக்கை எடுத்ததற்காக பாராட்டுகிறோம். இந்தப் பூச்சிக்கொல்லிகளில் பல, மற்ற நாடுகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளவை. ஆனால், விதிக்கப்பட்ட தடையை நீர்த்துப்போகச் செய்யக்கூடிய வகையில் வேதித் தொழில் துறையின் நெருக்குதல் காரணமாக தடையைத் திரும்பப் பெறுவதற்கு அரசு முயல்வதுபோல் தெரிகிறது. அவ்வாறு தடையை நீக்கி, பூச்சிக்கொல்லி உற்பத்தி அனுமதிக்கப்பட்டால், அது உள்நாட்டு நிபுணர் குழு பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவை நிராகரிப்பதாக அமையும். அது மட்டுமல்லாமல், பாதுகாப்பான மாற்று வழிகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளைத் தடுத்தும் நிறுத்தும்” என்று PAN ஆசிய பசிபிக் பிரிவின் நிர்வாக இயக்குநர் சரோஜெனி ரெங்கம் தெரிவித்துள்ளார்.


இந்தப் பூச்சிக்கொல்லிகளில் சில ஏற்கெனவே மாநில அளவில் தடை செய்யப்பட்டவை. மோனோ க்ரோடோபாஸ், அசிபேட் ஆகிய பூச்சிக்கொல்லிகள் மகாராஷ்டிர மாநிலத்தில் பருத்தி விவசாயிகள் அதிக அளவில் விஷம் குடித்து இறந்து காரணத்தால், அந்த மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. தீங்கு விளைவிக்கும் விளைவுகளால் 27 பூச்சிக்கொல்லிகளில் - 2, 4-டி, பென்ஃபுரகார்ப், டிகோஃபோல், மெத்தோமில், மோனோ க்ரோடோபாஸ் ஆகியவற்றுக்கு பஞ்சாப் மாநில அரசு புதிய உரிமங்களை வழங்கவில்லை. கேரளத்தில் இந்த பூச்சிக்கொல்லிகளில் மோனோ க்ரோடோபாஸ், கார்போபுரான், அட்ராசைன் ஆகியவை பொது சுகாதார காரணங்களால் 2011 முதல் தடை செய்யப்பட்டுள்ளன.


"இந்தப் பூச்சிக்கொல்லிகளை இந்திய உழவர்கள் இனிமேல் பயன்படுத்தாமல் இருப்பதே ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது” என்று பான் இந்தியா பிரிவின் உதவி இயக்குநர் திலீப் குமார் கூறியுள்ளார். இந்தத் தடை விதிக்கப்பட்டதால் இயற்கை வேளாண்மை சார்ந்த முறைகளுக்கு பெருமளவு உழவர்கள் மாறுவதற்கு சாத்தியம் இருக்கிறது. எனவே, திருத்தி முன்மொழியப்பட்ட பூச்சி மேலாண்மை 2020 மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பான் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 27 பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதிப்பதில் மத்திய அரசு உறுதியாகச் செயல்பட்டு மக்கள் நலனை ஆதரிக்குமா அல்லது தொழில்துறை நெருக்கடிக்குத் தலை சாய்க்குமா என்பதை சர்வதேச சமூகம் கவனித்துவருகிறது.


நன்றி : The Hindu

20 views0 comments