முனைவர் கண்ணன் வாரியருக்கு தலைசிறந்த வனஆராய்ச்சிக்கான தேசிய விருது


கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் முதுநிலை விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் முனைவர் கண்ணன் வாரியருக்கு 2019 -ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த வன ஆய்வுக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம் இவ்விருதினை வழங்கி வருகிறது.


முனைவர் கண்ணன் வாரியர் இதற்கு முன்பு இந்திய தாவரவியல் கழகத்தால் வழங்கப்பெரும் ரோலா எஸ். ராவ் தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


உயிரிப் பன்மையைக் காப்பதில் ஆய்வு மேற்கொண்டமைக்காக இவ்விருதினை பெற்றுள்ளார்.


வனவியல் விஞ்ஞானியாக, உப்பு நீரால் பாதிப்படைந்த நிலங்களில் வளர்வதற்கு ஏற்ற சவுக்கு ரகங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

இதனால் 6.73 மில்லியன் ஹெக்டர் நிலங்கள் பயன்பெறவுள்ளன. கேரள வேளாண் பல்கலையில் மாணவராக பயின்ற போதே, இளநிலை மற்றும் முதுநிலை வனவியல் பட்டப்படிப்புகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். கலா பிரதீபா விருதையும் 5 ஆண்டுகள் வென்றுள்ளார்.


வன ஆய்வில் 27 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள இவர், 232 ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். உலக உணவுக்கழகம், ஐக்கிய நாடுகளின் வனப் பணிக்குழுமம் ஆகிய உயர்மட்ட குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். யுனெஸ்கோ நிறுவனத்தால் தரவு பகுப்பாய்வு மற்றும் நிர்வாக அமைப்பியலில் பயிற்சி அளிக்கப்பட்டவர். ஆந்திரா மற்றும் கேரள வன வளர்ச்சிக் கழகங்களுக்கு ஆலோசகாரகவும் பணியாற்றியுள்ளார்.

தேசிய வன வளர்ப்பு திட்ட மதிப்பீட்டு குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் சுற்றுச்சுழல் தகவல் மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், நிறுவனத்தின் தகவல் ஒருங்கிணைப்பு அலுவலராகவும் செயல்படுகிறார்.


கலை ஆர்வம் மிகுந்த முனைவர் கண்ணன் வாரியர் அவர்கள் வானொலி, தொலைக்காட்சிகளில் பங்கு பெற்றதோடு, சிறந்த இசைக்கலைஞரும் ஆவார். இவர் தசபுஷ்பம் மற்றும் லலித்தம் ஆகிய இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.


அண்மையில் கேரள வனம் மற்றும் வனஉயிரினத் துறையால் வெளியிடப்பட்ட இசைக்கோர்வையையும் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

6 views0 comments