பந்தல் காய்கறி சாகுபடி தீவிரம்: மழையால் மகசூல் அதிகரிக்கும்


ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், பருவமழை பெய்வதால், நடப்பாண்டு பந்தல் காய்கறிகள் சாகுபடி பரப்பு அதிகரிக்குமென விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் ஆண்டுதோறும், ஆயிரம் ஏக்கர் வரை பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. புடலை, சுரக்காய், பீர்க்கன், பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது.கடந்தாண்டு மழைப்பொழிவு இருந்ததால், கிணறு, ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்தி, டிச., மாதம் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்தனர்.சாகுபடி செய்த காய்கறிகளை, ஏப்., மாதம் அறுவடை செய்தனர். அதன்பின், போதிய மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள், சாகுபடி செய்தனர். கிணற்றுநீரை பயன்படுத்தி, சொட்டுநீர் பாசனம் அமைத்து காய்கறிகள் சாகுபடி செய்தனர்.இந்நிலையில், நடப்பு பருவத்திலும் போதிய மழை பெய்வதால், பந்தல் காய்கறிகள் செழிப்பாக வளர்ந்துள்ளது. இதனால், இந்த பருவத்தில் அதிக மகசூல் கிடைக்குமென விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். விவசாயிகள் கூறியதாவது:கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்வதால், பந்தல் காய்கறிகள் மற்றும் இதர காய்கறிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கிறது. இதனால், அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.ஒன்றியம் முழுவதிலும் இன்னும், 20 நாட்களில் பந்தல் காய்கறிகள் அறுவடைப்பணி துவங்க உள்ளது.தற்போது, காய்கறி சந்தைகள் வழக்கம் போல செயல்படுவதால், போதிய விலை கிடைக்கும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

2 views0 comments