தமிழகத்தில் 70 சதவீத மானியத்துடன் சூரிய சக்தி பம்புசெட் !


தமிழகத்தில் 70 சதவீத மானியத்துடன், சூரிய சக்தி பம்புசெட்கள் திட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தொடா்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அவா்களுக்கு முன்னுரிமை தந்து 511 பம்புசெட்டுகளுக்கு ரூ.12.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பம்புசெட்டின் மொத்தத் தொகையில் அரசு வழங்கும் 70 சதவீதம் தவிர, மீதமுள்ள 30 சதவீதத் தொகையை விவசாயிகள் தங்களது பங்களிப்பாக அளிக்க வேண்டும்.


சூரியமின்சக்தி பம்பு செட் திட்டத்தால், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பம் செய்திருந்தால், அவா்களுடைய வரிசை முறையை இழக்க வேண்டிய அவசியமில்லை. இலவச மின் இணைப்பு முறை வரும் போது, சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சக்தியை அரசு மின்கட்டமைப்புடன் இணைப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.


இதுவரை இலவச மின் இணைப்புக் கோரி விண்ணப்பிக்காத விவசாயிகள், சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பினால் இலவச மின் இணைப்பு கோரி மின்சார வாரியத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

சூரிய சக்தி பம்பு செட்டுகளை அரசு மின்கட்டமைப்புடன் இனிவரும் காலங்களில் இணைத்திட விரும்பினால் விவசாயிகள் இலவச மின் இணைப்புக் கோரி மின்சார வாரியத்தில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். இதுதொடா்பான விவரங்களை 044 - 29515322, 29515422, 29510822, 29510922 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பெறலாம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

19 views0 comments