
சிவகிரியில் விதை சுத்திகரிப்பு நிலையம்: வேளாண் செயலர் துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டத்தில், வேளாண் திட்டப்பணிகளை, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி, ஆய்வு செய்தார். மொடக்குறிச்சியில் விவசாயி தேவராஜ் வயலில், கரும்பு பயிரில் அமைக்கப்பட்டிருந்த நுண்ணீர் பாசன கருவிகளை பார்வையிட்டு, கரும்பின் ரகம், பயன்பாட்டை கேட்டறிந்தார். மண்கரடு என்ற இடத்தில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், 50 லட்சம் ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்ட டிராக்டர், இதர வேளாண் கருவிகளை ஆய்வு செய்தார். தொட்டிபாளையத்தில் சென்னியங்கிரி என்பவரின் வயலில், ஒருங்கிணைந்த பண்ணைய செயலாக்க திட்டத்தை ஆய்வு செய்து, மரவள்ளி, நிலக்கடலை, வாழை, மஞ்சள் பயிர்களில் செயல்படுத்தப்பட்ட, வேளாண் தொழில் நுட்பங்களை ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். சிவகிரியில், 60 லட்சம் ரூபாய் அரசு மானியத்தில் அமைக்கப்பட்ட, விதை சுத்திகரிப்பு நிலைய செயல்பாட்டை துவக்கி வைத்தார். எழுமாத்தூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 1.30 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, 1,000 டன் கொள்ளளவு குடோனை பார்வையிட்டு, குறைந்த பட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்வதை பார்வையிட்டார்.