
கால்நடை மருத்துவத்தில் கறிவேப்பிலை
கறிவேப்பிலையிலும், அதன் மரப்பட்டைகளிலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பில்லாத நார்ச்சத்து, தாது உப்புகள், வைட்டமின் ஏ, சி, கால்சியம், ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை சர்க்கரை நோய், புற்று நோய், கல்லீரல் சம்பந்தமான நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியவை. கால்நடை மருத்துவ பல்கலையின் மூலிகை ஆராய்ச்சி தொடர்பாக கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாடுகளில் மலட்டுத்தன்மை, கழிச்சல் நோய்க்கு கறிவேப்பிலை சிறந்த மூலிகையாகும். சினைப் பிடிக்காத மாட்டுக்கு தினமும் கால் கிலோ முள்ளங்கி ஐந்து நாட்களுக்கும், அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சோற்றுக் கற்றாழை மடல், அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு முருங்கைக்கீரை, அதற்கடுத்த நான்கு நாட்களுக்கு கைப்பிடி அளவு பிரண்டை, கடைசி நான்கு நாட்களுக்கு கைப்பிடி அளவு பனை வெல்லம், உப்பு இவற்றுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். இதனால் கருப்பையின் நோய் குறைபாடுகள் நீங்கி மாடுகள் சினைப்பிடிக்க ஏதுவாக இருக்கும்.
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையுடன் 10 கிராம் வெந்தயம், 5 சின்ன வெங்காயம், ஒரு பல் பூண்டு, 10 கிராம் மஞ்சள், 5 மிளகு, பெருங்காயம், கசகசா இவற்றுடன் 100 கிராம் பனை வெல்லம் சேர்த்து சிறு உருண்டைகளாக கொடுத்தால் கழிச்சல் நோய் தீரும். இக்கலவை தினமும் ஒரு வேளை என்றளவில் நான்கு நாட்களுக்கு கொடுத்தால் நீர் கழிச்சல் குணமாகும்.