
காரீப் பருவ விவசாயத்திற்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

புவனகிரி; பிரதம மந்திரி பயிர் பாதுகாப்பு திட்டம்(காரீப்) பருவத்திற்கான காப்பீட்டுத்திட்டத்தில் புவனகிரி வட்டார விவசாயிகள் சேர்ந்து பயன் பெறுமாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.வேளாண் உதவி இயக்குனர் சுதமதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புவனகிரி வட்டாரத்தில் காரீப்பருவத்தில் விவசாயம் மேற்கொள்ள பிரதமமந்திரி பயிர் பாதுகாப்பு திட்டம் 2020 ஆண்டிற்கு(கடலுார் மாவட்டம்) அங்கீகரிக்கப்பட்ட ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், காப்பீட்டுத் தொகையில் 2 முதல் 5 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது.மீதமுள்ள பிரிமியத் தொகையை மத்திய, மாநில அரசுகள் செலுத்துகிறது. எனவே விவசாயிகள் தங்கள் பங்களிப்பாக ஒரு ஏக்கருக்கு ரூ.626 ஐ இம்மாதம் 31 ம் தேதிக்குள், அருகில் உள்ள பொது சேவை மையம்(சி.எஸ்.சி), தேசிய வங்கி, பிராந்திய கிராம வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் வங்கி கிளைகளில் ஆதார் அட்டை, பட்டா அல்லது சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு சேமிப்பு புத்தகம் ஆகியவற்றை எடுத்துச் சென்று காப்பீட்டுத் தொகை செலுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.