காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: தமிழக வேளாண் துறை அறிவிப்பு

காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெற உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம் என தமிழகவேளாண் துறை அறிவித்துள் ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:


ஆண்டு முழுவதும் காய்கறிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முக்கிய தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 110 விதியின்கீழ், முதல்வர் அறிவித்தார்.


அதன்படி, ஆண்டுதோறும் அனைத்து முக்கிய காய்கறிகள் நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதிசெய்ய, காய்கறிகள் பயிர்செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஹெக்டேருக்கு ரூ.2,500 வழங்க தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் கீழ், ஒரு விவசாயிக்கு, சாகுபடி மேற்கொண்ட பரப்பின் அடிப்படையில் அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். தோட்டக்கலைத் துறையின் பிற திட்டங்களின் கீழ், மானியம் பெறாத விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


தோட்டக்கலை பயிர்த்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவுசெய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மானிய உதவிகிடைப்பதற்கான பருவம், பயிர்மற்றும் இதர விவரங்களைப் பெற தங்கள் பகுதி தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுக வேண்டும்.


நன்றி: தீ இந்து

27 views0 comments