ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடவு பணி தொடக்கம்


பிரஞ்சு மேரிகோல்டு, இன்கா மேரிகோல்டு, சால்வியா, பிகோனியா, டையான்தஸ், பெட்டுனியா, ஆஸ்டர், ஜீனியா, டேலியா, பிளாக்ஸ், கேலண்டுலா, செல்லோசியா உள்பட 140 ரகங்களை சேர்ந்த 2.3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, புது பூங்கா உள்ளிட்ட இடங்களில் பணியாளர்கள் ஊட்டியில் பெய்து வரும் மழையை பொருட்படுத்தாமல் கம்பளி ஆடைகளை அணிந்த படி நடவு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 5 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட உள்ளது.


நடவு செய்யப்படும் மலர் செடிகளில் வருகிற செப்டம்பர் மாதம் பூக்கள் பூக்கத் தொடங்கும், பெரிய புல்வெளி மைதானத்தில் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளதால், அதை சமமாக வெட்டி பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. மலர் செடிகள் நன்றாக வளரும் வகையில் மண்புழு உரம் இடப்படுகிறது. இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ஊரடங்கு உத்தரவால் தாவரவியல் பூங்கா மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் 2-வது சீசனுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டால் உடனடியாக பூங்காவை தயார் செய்ய முடியாது. எனவே, தற்போது மலர் செடிகளை நடவு செய்து வருகிறோம் என்றார்.

7 views0 comments