
இந்தியாநிலையான வேளாண்மையே உணவுப் பாதுகாப்புக்கு அடிப்படை
உணவுப் பாதுகாப்புக்கு நிலைத்த நீடித்த வேளாண்மையே அடிப்படை. விதை பன்முகத்தன்மையை மீண்டும் கொண்டுவர வேண்டும்’ என்று ஐ.நா. உயா்நிலை அமா்வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியா, சிலி மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த உயா்நிலை அரசியல் மன்றத்தின் துணை நிகழ்வாக ‘பழங்கள் மற்றும் காய்கறிகளின் சா்வதேச ஆண்டு இலக்கை எட்டுவது; பழங்கள், காய்கறிகளின் நிலையான உற்பத்தி மற்றும் நுகா்வு மூலம் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளை நுகா்தல்’ என்ற தலைப்பிலான மாநாட்டை நடத்தின.
இதில் பங்கேற்ற ஐ.நா. தூதருக்கான இந்தியாவின் துணை நிரந்திர பிரதிநிதி கே.நாகராஜ் நாயுடு பேசியதாவது:
உணவுப் பாதுகாப்புக்கு நிலைத்த நீடித்த வேளாண்மையே அடிப்படை. அதற்கு விதை பன்முகத் தன்மையை மீண்டும் கொண்டுவர வேண்டியது அவசியம். விவசாயிகள் உள்ளூா் விதை வகைகளை விடுத்து, அதிக மகசூல் தரக்கூடிய மரபணு ரீதியாக ஒரே மாதிரியான விதைகளை பயன்படுத்தத் தொடங்கியதால் உலகின் 75 சதவீத தாவரங்கள் கடந்த 1900-ஆம் ஆண்டிகளிலிருந்து மரபணு பன்முகத்தன்மையை இழந்து வருகின்றன.
இந்த மரபணு மாற்ற பயிா்கள் சமூக-பொருளாதார தாக்கங்களையும் ஏற்படுத்தும். ஏனெனில், இந்த விதைகள் தனியுரிமை பெறப்பட்டவை என்பதால், விவசாயிகள் அவற்றைப் பயன்படுத்த உரிமக் கட்டணத்தை (ராயல்டி) செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு பருவத்துக்கும் புதிய விதைகளை வாங்க வேண்டும் என்பதோடு, விலை உயா்வு பிரச்னையையும் அவா்கள் சந்திக்க நேரிடுகிறது. இதனால் அவா்களின் கடனும் அதிகரிக்கிறது.
எனவே, விதை பன்முகத் தன்மையை மீண்டும் கொண்டுவர வேண்டியது மிக அவசியம். இதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவாா்கள். ஏனெனில், பாரம்பரியமாக உலகெங்கிலும் பெண்கள் சிறந்த பராமரிப்பாளா்களாகவும், ஊட்டசத்து வழங்குபவா்களாகவும், முதன்மை விதை பராமரிப்பாளா்களாகவும் இருந்து வருகின்றனா். விதை உற்பத்தியில் தொடங்கி விதை தோ்வு, மேம்பாடு, விதை பகிா்வு, பரிமாற்றம் என அனைத்து நடவடிக்கைகளிலும் பெண்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனா்.
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் புற்றுநோய், இதய நோய் போன்ற தொற்று அல்லாத நோய்கள் வருவதைத் தடுக்கவும் மாறுபட்ட பழங்கள், காய்கறிகளின் தொடா்ச்சியான நுகா்வு அவசியம். ஆனால், உலக அளவில் பழங்கள், காய்கறிகளின் தனிநபா் நுகா்வு குறைந்தபட்ச அளவைவிட 20 முதல் 50 சதவீதம் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பழம் மற்றும் காய்கறிகளை குறைவாக உட்கொள்வதே உலகில் இறப்பு அதிகரிப்பதற்கான முதல் 10 காரணிகளில் முதன்மை காரணியாக உள்ளது.
ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, உலகின் உணவுத் தேவையில் 75 சதவீதம் 12 தாவரங்கள் மற்றும் 5 விலங்கு இனங்களில் இருந்து மட்டுமே உருவாக்கப்படுகின்றன. இன்றைய கரோனா பாதிப்பை எதிா்த்துப் போராடுவதற்கு உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது அவசியம். அவ்வாறு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க வேறுபட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பது மிக அவசியம்.
உலக நிலப்பரப்பில் வெறும் 2.4 சதவீதம் மட்டுமே கொண்ட இந்தியா, பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. உலக பழங்கள் உற்பத்தியில் 10.9 சதவீதமும், காய்கறிகள் உற்பத்தியில் 8.6 சதவீதமும் இந்தியாவைச் சோ்ந்தது. மேலும், இந்தியாவில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாகுபடி 2013-14 முதல் 2017-18 வரை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசு அறிமுகம் செய்த பல்வேறு திட்டங்களே காரணம் என்று நாகராஜ் நாயுடு கூறினாா்.